பதற்றமான சூழலில் ஈரான் அதிபருடன் கத்தார் அரசர் சந்திப்பு..!

King of Qatar meeting with Iran principal.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் ஈரான் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசி கொன்றது. இந்த செயலுக்கு தக்க பதிலடி தரும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் ஏவுகணைகள் வீசி தாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது.

இத்தகைய பதற்றம் மிகுந்த சூழலில், ஈரான் அதிபர் ஹசன் ரெஹானியை கத்தார் அரசர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றத்தை போக்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்காவுடன் நிலவும் மோதல் போக்கை கைவிட பேச்சுவார்த்தையே தீர்வு என்று கத்தார் அரசர் கூறினார்.

இதுகுறித்து கத்தார் அரசர் கூறுகையில், நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் என்னுடைய இந்த பயணம் அமைந்துள்ளது. தற்போது ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே ஒரே தீர்வாக அமையும் என்றார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஈரானின் அதிகார தலைவர் அயத்துல்லா அலி காமேனியையும் கத்தார் அரசர் சந்தித்தார்.

இதுகுறித்து அதிகார தலைவர் காமேனி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஊழல் நிறைந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இந்த பிராந்தியத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இதனை எதிர்கொள்வதற்கு ஒரே தீர்வு, பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும். பதற்றமான சூழலில் கத்தார் அரசரின் இந்தப்பயணம் அரிதான ஒன்றாகும் என்று பதிவிட்டு உள்ளார்.