கத்தாரில் 2022 FIFA உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடக்கும்.!

கத்தார் 2022 FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2021இல் கூட டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. சிறிய நாடான கத்தாரில் மக்கள் தொகை 28 லட்சம் மட்டுமே. ஆனால், கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 65,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், கத்தாரில் இதுவரை 51 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அந்த வகையில் இறப்பு விகிதத்தை கட்டுக்குள் வைத்துள்ளது.

இதனிடையே, கத்தார் எவ்வாறு கால்பந்து உலகக்கோப்பையை நடத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள கால்பந்து உலகக்கோப்பை தொடரை தங்களால் பாதுகாப்பான முறையில், சரியான நேரத்தில் நடத்த முடியும் என கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி‌ அவர்கள் கூறியுள்ளார்.

தங்கள் மைதானங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை ஏற்படுத்தி செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவை அனைத்தும் முடிவடையும் பட்சத்தில், மைதானங்களை பொது மக்களுக்கு திறந்து விட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Source : Mykhel தமிழ்