பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்.!

Image Credits: Qatar Airways

கத்தார் ஏர்வேஸின் விமான பணியாளர்கள் அனைவரும் மே 25ஆம் தேதி முதல் பணி நேரத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (Personal Protective Equipment) அணிவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக ஊழியர்கள் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், தற்போது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Credits: Qatar Airways

பயணத்தின் போது பயணிகள் மற்றும் ஊழியர்கள் இடையேயான தொடர்பின் போது கொரோனா தொற்று பரவும் அச்சம் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் கத்தார் ஏர்வேஸ் விளக்கமளித்துள்ளது.

  • அதன்படி, ஊழியர்கள் மட்டுமல்லாமல், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
  • பயணிகள் தங்களுக்கு தேவையான முகக்கவசம் மற்றும் கையுறைகளை தாங்களே எடுத்து வர வேண்டும்.
  • விமானத்தில் பெரிய அளவிலான சானிடைசர் வைக்கப்பட்டிருக்கும் என்றும், பயணிகள் மற்றும் ஊழியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.
  • சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் பயணிகளுக்கு இருக்கைகள் கொடுக்கப்படவிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கத்தார் ஏர்வேஸின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளால் இனிவரும் காலங்களில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரி அக்பர் அல் பேக்கர் கூறுகையில், எங்கள் ஏர்வேஸில் பயணம் செய்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் ஒரே குறிக்கோள். பயணிகள் எந்த பயமும் இல்லாமல் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறோம் என கூறியுள்ளார்.

Source: News7 Tamil