கத்தாரில் கால்பந்து பயிற்சியை ரத்து செய்த அமெரிக்கா..!

Qatar Football

கத்தார் தலைநகர் தோஹாவில் இருக்கும் ஆஸ்பையர் அகாடமியில் 20 நாள் பயிற்சி முகாம் ஜனவரி 05 முதல் தொடங்க திட்டமிடப்பட்டு, 25 வீரர்களை அமெரிக்க பயிற்சியாளர் கிரெக் பெர்ஹால்டர் தேர்வு செய்து இருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் ட்ரோன் தாக்குதல் மூலம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதை அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்திய 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க கால்பந்து பயிற்சி ரத்து முடிவை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “அந்த பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நிலைமை காரணமாக, ஆண்கள் தேசிய அணியின் திட்டமிடப்பட்ட ஜனவரி பயிற்சி முகாமுக்கான கத்தார் பயணத்தை ஒத்திவைக்க அமெரிக்க கால்பந்து முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாட்டில் முதன்முறையாக நடைபெற இருக்கும் ஃபிபா 2022 கால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் தான் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்குப் பகுதிகளில் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களால் இந்த அவசர முடிவை எடுத்துள்ளது அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு.