விஜய் மல்லையாவிற்கு கத்தார் தேசிய வங்கி நோட்டீஸ்..!

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, கோடிக்கணக்கில் கடன் வாங்கி, பிரெஞ்சு தீவு ஒன்றில் விஜய் மல்லையா வாங்கிய ஆடம்பர பங்களா பராமரிப்பின்றி பாழடைந்து விட்டதாக, அவருக்கு கடன் கொடுத்த கத்தார் தேசிய வங்கி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகளுக்கு சுமார் 8 ஆயிரத்து 520 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்து விட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கிறார்.

இந்த நிலையில், கத்தார் தேசிய வங்கியில் இருந்து சுமார் 215 கோடி ரூபாய் கடன் பெற்று, பிரெஞ்சு தீவான ‘இல்லே செயின்ட் மார்குரைட்டில்’ ( Ile Sainte Marguerite) ஒன்றேகால் எக்டர் பரப்பளவில் 17 படுக்கையறைகள் கொண்ட ஆடம்பர பங்களாவை மல்லையா வாங்கினார்.

திரையரங்கம், ஹெலிபேட், இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளிட்ட வசதிகள் அடங்கிய இந்த பங்களாவிற்கான கடனையும் அவர் திருப்பிச் செலுத்தவில்லை. இதை அடுத்து 700 கோடி ரூபாய்க்கு அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய கத்தார் தேசிய வங்கி குறிப்பிட்ட ஆடம்பர பங்களா சீரமைக்க முடியாத அளவுக்கு சீரழிந்து விட்டதாக லண்டன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தகவல் : தமிழக ஊடகங்கள்