கத்தாரில் கொரோனா வைரஸிற்கு நான்காவது நபர் மரணம்; புதிதாக 279 பேருக்கு பாதிப்பு.!

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு நான்காவதாக ஏற்பட்ட மரணம், 279 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 14 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார (MoPH) அமைச்சகம் இன்று (05-04-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,604ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்கள், கத்தார் திரும்பிய பயணிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாக தெரிவித்துள்ளது.

குணமடைந்தோர்

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் இருந்து மேலும் 14 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 123ஆக உள்ளது.

மரணங்கள்

கத்தாரில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட நான்காவது மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று பதிவு செய்துள்ளது.

இறந்தவர், 88 வயதான கத்தார் குடிமகன் என்றும், பல நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்றும், இரத்தத்தில் கடுமையான பாக்டீரியா தொற்று காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அதே நேரத்தில், இவருக்கு கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் பொது சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், இறந்தவர் மார்ச் 3 ஆம் தேதியன்று, மருத்துவமனைக்கு வந்தபின் தீவிர மருத்துவ சிகிச்சை பெற்றார். அவருக்கு தேவையான சிகிச்சையும், கவனிப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததன் விளைவாக இன்று காலை இறந்துள்ளார் எனவும் MoPH தெரிவித்துள்ளது.

சோதனைகள்

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,806 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.

கத்தாரில், இதுவரை 35,757 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.