COVID-19 பாதிப்புக்கு இடையில் உள்நாட்டு சுற்றுலாவை மீண்டும் தொடங்கும் சவுதி அரேபியா.!

அரபு நாடுகளில் கொரோனோ வைரஸ் பாதிப்பில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 991ஆக உள்ளது. இதுவரை 1,139 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், அந்த நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து தளர்த்தி வருகிறது.

அந்தவகையில், சிறிய கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை அனைத்தும் வழக்கம் போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மசூதிகள் திறக்கப்பட்டு தொழுகை நடத்த மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உள்நாட்டு விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சவுதி அரசு நீக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் உள்நாட்டு சுற்றுலாவை மீண்டும் தொடங்க சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுற்றுலா துறை மந்திரி அகமது பின் அகீல் காதிப் அவர்கள் கூறுகையில், கோடை காலத்தில் உள்நாட்டு சுற்றுலாவுக்காக நாங்கள் பல திட்டங்களை உருவாக்கி உள்ளோம். இந்த மாத இறுதிக்குள் அவற்றை நாங்கள் செயல்படுத்த தொடங்குவோம். நாங்கள் சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் உடன்பட்டு சுற்றுலா திட்டங்களை உருவாக்கியுள்ளோம். அதன்படி, மெக்காவை தவிர அனைத்து பகுதிகளும் சுற்றுலா மீண்டும் தொடங்கும் எனக் கூறினார்.

Source: தமிழக ஊடகங்கள்