கத்தார் நாட்டிற்குள் இந்தியா உட்பட 14 நாடுகள் நுழைய தடை..!

கத்தார் ஏர்வேஸ் இத்தாலிக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை தற்காலிகமாக இடை நிறுத்திய அறிவிப்புக்கு மேலதிகமாக, கத்தார் நாட்டிற்குள் நுழைவதற்கு 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இன்று (09-03-2020) முதல், கத்தார் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) தற்காலிக தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகளவில் பரவுவதால், இந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தில் பின்வரும் நாடுகள் அடங்குகின்றன :

 1. இந்தியா
 2. பங்களாதேஷ்
 3. சீனா
 4. எகிப்து
 5. ஈரான்
 6. ஈராக்
 7. லெபனான்
 8. நேபாளம்
 9. பாகிஸ்தான்
 10. பிலிப்பைன்ஸ்
 11. தென் கொரியா
 12. இலங்கை
 13. சிரியா
 14. தாய்லாந்து.

இந்த நாடுகளிலிருந்து கத்தார் நாட்டிற்கு நுழைய விரும்பும் அனைவரையும் இந்த தீர்மானம் பாதிக்கும். QID வைத்திருப்பவர்கள், பணி அனுமதி வைத்திருப்பவர்கள் (Work Permit) மற்றும் தற்காலிக பார்வையாளர்கள் (Temporary Visitors) என அனைவருக்கும் கத்தாருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நேரத்தில் அத்தியாவசிய பயணங்களைத் தவிர, மற்ற அனைத்தையும் தவிர்க்குமாறு கத்தார் அரசு அனைத்து குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தாரில் வசிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, கொரோனா வைரஸ் பரவுவது குறித்து தேசிய சுகாதார அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் சமீபத்திய வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.