COVID-19 : கத்தாரில் நேற்று இரண்டாவது மரணம் பதிவு; புதிதாக 88 பேருக்கு தொற்று உறுதி.!

covid-19 update qatar jan11

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டாவதாக ஏற்பட்ட மரணம், 88 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 11 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார (MoPH) அமைச்சகம் ‌நேற்று (31-03-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 781ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்கள், கத்தார் திரும்பிய பயணிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், மற்றவர்கள் COVID-19 நோயால் கண்டறியப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாக தெரிவித்துள்ளது.

குணமடைந்தோர்

கத்தாரில் நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் இருந்து மேலும் 11 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 62ஆக உள்ளது.

மரணங்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 58 வயதான ஒருவரின் மரணத்தை அமைச்சகம் நேற்று பதிவு செய்துள்ளது. கத்தாரில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும்.

இறந்தவர், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்றும், மார்ச் 17 ஆம் தேதி நோயைக் கண்டறிந்த உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்றும், மருத்துவமனையில் நுழைந்தவுடன் அவருக்கு தேவையான சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும்‌, இறந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சகம் இரங்கலைத் தெரிவித்துள்ளது.

சோதனைகள்

கொரோனா வைரஸை கண்டறிய நேற்று மட்டும் 2,291 பேருக்கு சோதனைகளை நடத்தியுள்ளதாகவும், அவர்களில் 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 22,349 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கத்தாரில், வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புடனும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.