கத்தாரில் கோடைக்கால வேலை நேரங்களை மீறியதற்காக 33 நிறுவனங்களின் வேலைத்தளங்கள் மூடல்.!

Pic: iloveqatar.net

கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை கோடைக்காலத்தில் திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வதற்கான வேலை நேரம் காலையில் ஜந்து மணி நேரத்திற்கு மேல் இருக்க கூடாது என்றும்,  காலை 11:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை வேலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஜூலை 5 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் அமைச்சகத்தின் ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டதன் விளைவாக இந்த முடிவின் விதிமுறைகளை மீறிய 33 நிறுவனங்களின் வேலைத்தளங்களைத் 3 நாட்களுக்கு மூடியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முடிவின் விதிமுறைகளை மீறியதற்காக கடந்த ஜூன் 15 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள நிறுவனங்களின் 173 வேலைத்தளங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் மந்திரி தீர்மானத்தின் விதிகளுக்கு இணங்க வேண்டும் என்றும், இந்த காலகட்டத்தில் நேரடி சூரிய ஒளியின் கீழ் அல்லது திறந்தவெளி பணியிடங்களில்  வேலை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.