கத்தாரில் QR 3.6 பில்லியன் மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள்; கத்தார் நிறுவனங்களுடன் Ashghal 9 ஒப்பந்தங்களில் கையெழுத்து.!

கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) கடந்த ஜூலை 5ம் தேதியன்று கத்தார் நிறுவனங்களுடன் வீதிகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 9 புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் QR 3.6 பில்லியன்களாகும். இந்த திட்டங்கள் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளின் 5,111 குடியிருப்புக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது, நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் அப்துல்லா பின் அப்துல்அஜிஸ் பின் துர்கி அல் சுபாய், Ashghal தலைவர் டாக்டர் சாத் பின் அஹ்மத் அல் முஹன்னதி, மத்திய நகராட்சி மன்றத்தின் 14ஆம் தொகுதியின் தலைவர் முகமது பின் ஹமூத் அல் ஷாஃபி, Ashghal-லின் பிரதிநிதிகளான திட்ட விவகார இயக்குநர் யூசப் அல்-எமாடி, சாலைகள் திட்டத்துறை மேலாளர் சவுத் அல்-தமிமி ஆகியோரின் முன்னிலையில் புதிதாக ஒப்பந்தங்களை பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.

புதிய ஒப்பந்தங்கள் கத்தாரின் பல்வேறு பகுதிகளின் புதிய துணைப்பிரிவுகளுக்கு வீதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கான Ashghal-லின் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இந்த திட்டங்கள் Semaisma South, Al Ebb and Leabaib, Umm Slal Mohammed, Al Wajba East, Mebaireek மற்றும் Al Meshaf South ஆகிய 6 பகுதிகளை உள்ளடக்கியதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்திடப்பட்ட திட்டங்கள், சுமார் 281 கி.மீ சாலைகள், 10,350க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் 15,800க்கும் மேற்பட்ட வாகன நிறுத்துமிடங்களை வழங்கும் என்றும் மேலும், கழிவுநீர், மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் மற்றும் TSE நெட்வொர்க்குகள் மொத்தமாக 684 கி.மீ நீளத்தில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Image Credits: Ashghal Qatar

இந்த புதிய திட்டங்கள் உள்நாட்டிலிருந்து பெறக்கூடிய அனைத்து பொருட்களையும் பெற உள்ளூர் உற்பத்தியாளர்களை அதிக அளவில் நம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: The Peninsula Qatar