தோஹாவிலிருந்து இந்தியா புறப்பட வேண்டிய விமானம் ரத்து.!

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின்படி, கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து இந்தியா கிளம்பவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவலால், அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால், விமான சேவை நிறுத்தப்பட்டதால், நாடு திரும்ப முடியாமல், பல நாடுகளில், இந்தியர்கள் சிக்கித் தவித்தனர். இதனையடுத்து, வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க, வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

மே 7 முதல் 13 வரை, முதல் வாரத்தில் 64 விமானங்களை ஏர் இந்தியா இயக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தோஹாவிலிருந்து இந்தியா கிளம்பும் விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

தோஹாவிலிருந்து ஏர் இந்தியா விமானம், நேற்று (10-05-2020) பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.45 மணியளவில் திருவனந்தபுரம் வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் விமானம் தோஹாவிலிருந்து புறப்படவில்லை. விரைவில் திருத்தப்பட்ட அட்டவணை அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Source: Dinamalar