கத்தாரில், தொழிலாளர்கள் முகக்கவசம்‌ அணியாததால் இரண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை.!

கத்தாரில், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுவனங்கள் கடைபிடிக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்காக நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (MADSLA) அல் வக்ரா பகுதியில் ஆய்வு செய்த போது, இரண்டு கட்டுமான நிறுவனங்களில் தொழிலாளர்கள் முகக்கவசம் அணியாமல் வேலை செய்வதை கண்டறிந்தனர்.

அனைத்து தொழிலாளர்களும் பணிபுரியும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டளையை கட்டுமான நிறுவனங்கள் மீறியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலதிக நடவடிக்கைகளுக்காக இரு நிறுவனங்களின் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டனர் என்று கூறியுள்ளது. கத்தாரில், ஷாப்பிங் சேவைத் துறையில் பணிபுரியும் நபர்கள் மற்றும் கட்டுமானத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

இந்த கட்டளையை மீறுபவர்களுக்கு தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக 1990 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க ஆணைச் சட்டத்தின்படி, மூன்று வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை மற்றும் QR 2,00,000 ரியால்கள் அபராதம் அல்லது இந்த இரண்டு அபராதங்களில் ஏதாவது ஒன்று விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தங்குமிடம் மற்றும் பணியிடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான மீறல்களைப் புகாரளிக்க அமைச்சகம் 40280660 என்ற ஹாட்லைனை ஒதுக்கியுள்ளது.

Source : TPQ