கத்தாரில் அல்-கோர் குடும்ப பூங்கா பொதுமக்களுக்காக மீண்டும் திறப்பு..!

Qatar Al-khor Family Park.

கத்தாரில் நூறு நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அல்-கோர் (AL-KHOR) குடும்ப பூங்கா மீண்டும் பொது மக்களுக்காக நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) திறந்துள்ளது.

அபிவிருத்திப் பணிகள் பொதுப்பணி ஆணையத்தின் ‘அஷ்கால்’ இன் மேற்பார்வையின் கீழும் MME யின் பொது பூங்காக்கள் திணைக்களத்தின் பின் தொடர்தளிலும் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி வரை பூங்காவில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றன. இந்த அபிவிருத்திப் பணியில் மிருகக்காட்சி சாலையின் விரிவாக்கம் மற்றும் புதிய பிரிவுகளையும் விலங்குகளையும் இணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அல்-கோர் பூங்காவின் புதிய சிறப்பம்சங்கள் :

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த பூங்காவில் ஒரு ஷோரூம் மற்றும் பல அரங்குகளை உள்ளடக்கிய ஒரு அருங்காட்சியகம், 400 பேர் இருக்கக்கூடிய ஒரு ரோமன் தியேட்டர், மூன்று மூடப்பட்ட அரங்குகள் மற்றும் பேட்டரி மூலம் இயக்கப்படும் ரயில், இரண்டு சிற்றுண்டிச்சாலைகள், சிறுவர்களுக்காக இரண்டு ரப்பர் தரையுடன் கூடிய விளையாட்டுப் பகுதி, ஆறு பொது கழிப்பறைகள் உள்ளிட்ட பல புதிய வசதிகள் இந்த பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில், ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 360 பேர் தொழக்கூடிய ஒரு பள்ளிவாசலும் உள்ளது‌. மேலும் இதில், குடிநீருக்காக 12 வாட்டர் கூலர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், இதில் புதிய விலங்குகள் மற்றும் பறவைகள் பிரிவில் ஒரு முதலை ஏரி, இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள், ஒரு ஆசிய கரடி, இரண்டு ஆப்பிரிக்க சிங்கங்கள், இரண்டு வங்காள புலிகள், இரண்டு கருப்பு ஜாகுவார்கள் மற்றும் குரங்குகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

பூங்காவின் கட்டண விபரம் :

நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 15 ரியால்களும், 10 வயதுக்குற்பட்ட குழந்தைகளுக்கு 10 ரியால்களும் ஆகும்.

அல்-கோர் பூங்கா திறந்திருக்கும் நேரம் :

சனி முதல் வியாழன் வரை காலை 8:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை மதியம் 2:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை திறந்திருக்கும்.மேலும், செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே பூங்காவிற்குள் நுழைய முடியும் என்பாதாக கூறப்பட்டுள்ளது.