கத்தாரில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு..!!

கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட புதிய நான்கு வழக்குகளை கத்தார் சுகாதார அமைச்சகம் இன்று (02-03-2020) உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்ததுள்ளது.

கத்தாரில், புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்கள், இரண்டு கத்தார் குடிமக்களும், இரண்டு வீட்டுப் பணியாளர்களும் ஆவார்கள். இந்த நான்கு பேரும் ஈரானிலிருந்து கத்தார் நாட்டிற்கு விமானத்தில் பயணம் செய்தவர்கள். இவர்கள் கடந்த 27 ஆம் தேதி கத்தாருக்கு வந்தனர். அன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என்பதையும், பொதுமக்களுடன் நோயாளிகளுக்கு எந்த விதமான ஈடுபாடும் இல்லை என்றும் MOPH விளக்கியுள்ளது.

மேலும், முன்னதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மூவரும் நிலையான நிலையில் உள்ளதாகவும், வைரஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுவதாக கத்தார் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் MOPH எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.