கத்தாரில் கொரோனா பரவலை தடுக்க புதிய நடவடிக்கைள்..!

கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதை உறுதி செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை கத்தார் நேற்று (17-03-2020) அறிவித்துள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஷாப்பிங் மால்களிலுள்ள சலூன் நிலையங்கள் மற்றும் சில்லறை கடைகள், தொழில்துறை பகுதி ஆகியன மூடப்படுகின்றது என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, கத்தாரினால் செயல்படுத்தப்படும் சமீபத்திய தடுப்பு நடவடிக்கைகளை நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக் குழுவின் செய்தித் தொடர்பாளர் லோல்வா பின்த் ரஷீத் அல்-காதர் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளில், வீதி எண் 1 முதல் வீதி எண் 32 வரை தொழில்துறை பகுதியின் ஒரு பகுதியை நேற்று மார்ச் 17 முதல் இரண்டு வார காலத்திற்கு மூடுவதும் அடங்கும்.

மேலும், உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் தவிர்த்து, வணிக வளாகங்கள் மற்றும் வணிக மையங்களில் உள்ள அனைத்து சில்லறை கடைகளும் வங்கி கிளைகளும் மூடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் சலூன் நிலையங்கள் மூடப்படும் மற்றும் சில சலூன் நிலையங்களினால் வழங்கப்படும் வீட்டு சேவைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படும் என அல்-காதர் கூறினார்.

மேலும், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஹோட்டல்களில் உள்ள சுகாதார கிளப்புகளின் அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.