கத்தாரில் இருந்து தனது தந்தையை பார்க்க வந்த இளைஞர் – கொரோனா அறிகுறியால் ஏற்பட்ட சோகம்.!

கத்தார் நாட்டில் பணிபுரியும், கேரளாவைச் சேர்ந்த லினோ அபெல்(30) என்ற இளைஞர், கட்டிலில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக, கடந்த 8ஆம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், விமான நிலையம் வந்து இறங்கிய லினோவுக்கு லேசான இருமல் இருந்ததால், தானாகவே மருத்துவ அதிகாரிகளை அணுகி, கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க : கத்தாரில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு.!

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லினோ அபெலின் தந்தை உடல்நலம் மிகவும் மோசமடைந்து கடந்த 9ஆம் தேதி மரணமடைந்தார்.

ஒரே மருத்துவமனையில் இருந்த போதிலும், கொரோனா வைரஸ் அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால், தனது தந்தையின் உடலை நேரில் பார்க்க முடியாத துரதிர்ஷ்டசாலி ஆனார், பிறகு மருத்துவமனையில் இருந்து தனது தந்தையின் உடல் ஆம்புலன்ஸில் செல்வதை, அறையின் ஜன்னல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்தார். பின்னர், மொபைல் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச்சடங்கைப் பார்த்து துடித்துப் போனார்.

இந்நிலையில், தனது நிலைமை குறித்து அவர் முகநூலில் ஒரு பதிவை இட்டுள்ளார் அதில், விமான நிலையத்தில் தாமாகவே முன்வந்து மருத்துவக் குழுவை அணுகாமல் இருந்திருந்தால், தனது தந்தையை கடைசியாக ஒரு முறையாவது பார்த்திருக்க முடியும் எனினும் தான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை காரணம் கொரோனா வைரஸ் தன்னைத் தாக்கி இருந்தால், பலருக்கும் பரவிவிடும் என்கிற காரணத்தால், தாமாகவே  மருத்துவமனையில் சேர்ந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.